In Media

ஊரடங்கில் மக்களின் துன்பங்களை எழுதிய பத்திரிகையாளர்கள் மீது அரசுகள் வழக்கு !, Vinavu

Vinavu
By சுகுமார் -June 23, 2020

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உச்சநீதிமன்றத்தால் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மீபத்தில் மோடியின் வாரணாசி தொகுதியில் ஊரடங்கினால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமங்களை பதிவு செய்ததற்காக ஸ்க்ரோல் இணைய தளத்தின் நிர்வாக ஆசிரியர் சுப்ரியா சர்மா மீது முதல் தகவல் அறிக்கையை உ.பி போலீசு பதிவு செய்திருக்கிறது. ஊரடங்கின் போது மக்கள் படும் துன்ப துயரங்களையும், அரசு இயந்திரத்தின் நிர்வாக சீர்கேடுகளையும், இலஞ்ச ஊழல் முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியதற்காக இந்தியா முழுவதும் குறைந்தது 53 ஊடகவியலாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் தொடுத்திருக்கின்றன.

மோடியின் வாரணாசி தொகுதியில் மோடி தத்தெடுத்த ஒரு கிராமத்தில் ஊரடங்கு சமயத்தில் அந்த மக்கள் தங்களது அடிப்படை தேவைகளுக்கே கடுமையாகப் போராடி வந்த சூழலை ஸ்க்ரால் இணையதளத்தின் ஆசிரியர் சுப்ரியா சர்மா அங்கு சென்று மக்களின் வாழ்நிலையை கண்டறிந்து எழுதினார். மோடி தத்தெடுத்த கிராமத்தின் நிலையை அம்பலப்படுத்தியதைக் கண்டு கடுப்படைந்த யோகி ஆதித்யநாத் அரசு, சுப்ரியா சர்மாவிற்கு நேர்காணல் அளித்த பெண் குடும்பத்தை மிரட்டி, சுப்ரியாவுக்கு எதிராக புகாரளித்து வழக்கு தொடரச் செய்துள்ளது. தமது வாழ்நிலையை வெளிப்படையாக எழுதியதன் மூலம், தம்மை பொதுவெளியில் அசிங்கப்படுத்தியதாக அந்தப் பெண் புகாரளித்துள்ளார்.

இத்தகைய முதல் தகவலறிக்கைகள் தொடங்கி கைது நடவடிக்கைகள், நீதிமன்ற சம்மன்கள், உடல் ரீதியான தாக்குதல்கள், சொத்துக்களை அழித்தல் மற்றும் கோவிட் -19 குறித்த அறிக்கைக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வரை என கடந்த மார்ச் 25 முதல் 2020 மே 31 வரை பல்வேறு ஊடகவியலாளர்கள் ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டதாக புது டில்லியைச் சேர்ந்த உரிமைகள் மற்றும் அபாயங்கள் பகுப்பாய்வுக் குழு (Rights & Risks Analysis Group -RRAG)என்ற தனியார் சிந்தனைக்குழாம் அமைப்பு கூறியிருக்கிறது.

உ.பி-யில் 11 பேரும், ஜம்மு காஷ்மீரில் 6 பேர், இமாச்சல் பிரதேசத்தில் 5 பேரும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிஸா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 4 பேரும், பஞ்சாப், டெல்லி, மத்தியப்பிரதேசம், கேரளாவில் தலா இருவரும், அந்தமான், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவரும் ஒடுக்குமுறைக்கு உள்ளானதாக ”இந்தியா: கோவிட்-19 ஊரடங்கின் போது ஊடகத்தின் மீதான ஒடுக்குமுறை” என்ற ஆய்வறிக்கையில் அந்த சிந்தனைக்குழாம் அமைப்பு கூறியிருக்கிறது.

“தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்தே கோவிட்-19 குறித்து தவறான தகவல் வெளியிடுவதாக கூறி ஊடக சுதந்திரத்தை இந்திய அரசாங்கம் நசுக்க முயன்றது. 31.03.2020 அன்று, தொற்றுநோய் பற்றிய திறந்த விவாதத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுத்து விட்டாலும் கூட பல்வேறு தவறான நிர்வாகக் குறைபாடுகள், ஊழல் முறைகேடுகள், புலம் பெயர்ந்தோர், தொழிலாளர்கள் மற்றும் வறிய குடிமக்கள் மீதான பட்டினிக் கொடுமைகள், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உடைகளும், கருவிகளும் இல்லாதது போன்ற செய்திகளை தெரிவித்த ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையை முழுவீச்சுடன் அரசு தொடங்கியது”என்று RRAG-ன் இயக்குனர் சுஹாஸ் சக்மா கூறினார்.

எனவே தான், உலகிலேயே ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் தேசிய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊடகவியலாளர்கள் கேடு விளைவிப்பதாக அரசு மற்றும் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டுவதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை என்றும் சுஹால் சக்மா கூறினார்.

ஐபிசி, தகவல் தொழில்நுட்ப சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் / பட்டியல் சாதியினர் (வன்முறைகளைத் தடுக்கும்) சட்டம் மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் (தடுப்பு) சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் குறைந்தது 22 ஊடகவியலாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் (எஃப்.ஐ.ஆர்) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பட்டினிக் கொடுமைகள், அவர்களுக்கு ரேஷன் வழங்குவதில் நிர்வாகத்தின் தோல்வி, புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் கூடுதல், புலம்பெயர்ந்தோருக்கான துயர் நீக்க முகாம்களை நடத்துவதில் முறைகேடுகள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் நிர்வாக குளறுபடிகள் போன்றவற்றை வெளியிட்டதற்காகவோ அல்லது ஆளும் கட்சி அல்லது முதலமைச்சர்களை விமர்சித்ததற்காகவோ, இந்த வழக்குகள் புனையப்பட்டுள்ளன. அதிலும் ஒரு சில ஊடகவியலாளார்களை மிரட்டுவதற்கு மட்டுமே பல்வேறு முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் குறைந்தது 10 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 பேர் உச்சநீதிமன்றத்தால் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊழல் மற்றும் இலஞ்ச முறைகேடுகள், உணவுப்பொருள் மற்றும் பாதுகாப்புக்கருவிகள் தட்டுப்பாடு போன்றவற்றை அம்பலப்படுத்தியது முதல்,“கோவிட்-19 நோயாளிகளிடம் கைப்பேசியில் மட்டுமே பேசிய குடும்பத்தினர் ஏன் தனிமைப்படுத்தப்பட்டனர்?” என்று டிவிட்டரில் கேள்வி எழுப்பியது வரை அனைத்திற்கும் கோவிட்-19 பற்றி வதந்தி பரப்பியதாகவும், ஊரடங்கை மீறியதாகவும் கூறி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

முசாஹர் (Musahar) சமூகத்தினர் (தலித்) உணவில்லாமல் புல்லை சாப்பிடுவதை வெளியிட்டது, தவறான தகவல் வெளியிடுவதாக குற்றச்சாட்டு, நிர்வாகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் குற்றச்சாட்டு அல்லது பி.பி.இ கருவிகள் போதுமான தரத்தில் இல்லை என்று கூறும் அதிகாரபூர்வ கடிதத்தை வெளியிட்டது போன்ற காரணங்களுக்காக ஏழு ஊடகவியலாளர்களுக்கு நீதிமன்ற சம்மன் அனுப்பப்பட்டது.

போலீஸ் காவலில் இருந்த இருவர் உட்பட ஒன்பது ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிசாவில் கிராமத் தலைவர் ஒருவரால் (சர்பஞ்ச்) ஒரு ஊடகவியலாளர் பிணைக் கைதியாக்கப்பட்டிருந்தார். தெலுங்கானாவில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ குறித்து எழுதியதற்காக மற்றொரு பத்திரிகையாளரின் வீடு இடிக்கப்பட்டது. ஊரடங்கின் போது “வனவிலங்குகளை வேட்டையாடும் போக்கு அதிகரித்ததாக” ஒரு கட்டுரையை வெளியிட்டதற்கு அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெண் ஊடகவியலாளார் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்.

ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அனைத்திலும் இந்திய பத்திரிகை கவுன்சில் தலையிடுமாறு RRAG பரிந்துரைத்திருக்கிறது. மேலும் அரசியல் கட்சியினர் ஊடக சுதந்திரத்தில் தலையிடுவதை தடுத்து ஊடகவியலாளர்கள் பயமில்லாமல் பணி செய்வதற்கான நிலைமைகளை உருவாக்க இந்திய அரசாங்கத்திற்கு வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை மோடி அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிக்கும் அளவிற்கு தான் ஊடக சுதந்திரம் இருக்கிறது. இந்நிலையில், ஊடக சுதந்திரத்திற்காக மோடி அரசாங்கத்திடம் கெஞ்சுவது என்பது ஆட்டை பாதுகாக்க ஓநாயிடமே முறையிடுவது போல தான். கொரொனா காலத்தில் மக்கள் படும் வதைகளை சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டுமானால் பத்திரிகையாளர்கள் அமைப்பாய் திரண்டு அரசை எதிர் கொள்வதும் அதற்கு மக்கள் ஆதரிப்பதும் அத்தியாவசியமானதாகும்.

– சுகுமார்

நன்றி: 55 Journalists Face Persecution for Highlighting People’s Suffering During Lockdown

Share the story